Tuesday, August 3, 2010

என்னை பாதித்த படம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமை.இன்று கண்டிப்பாக நான்கு மணிக்கு சன் T V  படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அடமாக உட்கார்ந்து விட்டேன் .என்ன ஸ்பெஷல் தெரியுமா ?மாயாண்டி குடும்பத்தார் படம் போட்டு இருந்தார்கள் .அந்த படத்தின் விஷேசம் என்ன தெரியுமா ? அம்மா கடைசியாய் பார்த்து விட்டு ரொம்பவும் பாராட்டி நீ கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று மூச்சு இரைப்புக்கு நடுவில் சொன்ன படம்.நானும் பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்தேன்.திருட்டு cd  கொடுக்கும் பூக்கரனிடம் கூட சொல்லி வைத்து இருந்தேன்.அம்மா ஏன் ரொம்பவும் பிடித்தது என்று சொன்னார்கள் என்று படத்தைப் பார்க்கும் போது தான் புரிந்தது.ரொம்பவும் சாதரனம குடும்பக் கதை.ஆனால்....அதில் அந்த கடைசி மகனின் ....கஷ்டங்களில் அம்மா அப்பாவைப் பார்த்திருக்க வேண்டும் அதனால் தான்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிக்கு வந்திருந்த போதெல்லாம் அப்பா தான் பட்ட கஷ்டங்களை கதை போல் சொல்வார்விடியற்காலை குக்கர் சத்தத்தின் நடுவே அப்பாவின் வரலாறு .....அப்போது அவை ஏதோ அப்பா எனக்கு வாழ்க்கைப் பாடம்சொல்லிக் கொடுக்கிறார் என்று தான் நினைத்தேன்.அப்புறம் அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அம்மா என்னுடன் இருந்த போது அம்மாவின் நினைவு ஊர்வலக்கோவைகளும் அப்பாவின் கஷ்டங்களை வரிசை படுத்தி இருந்தன.அவை எனது ஆழ  மனக் கிணற்றில் இவ்வளவு நாட்கள் தொங்கிக் கொண்டு இருந்திருக்கின்றன.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்து அழுதேன்.மனம் ரொம்ப பாரமாக இருந்தது.அப்பா எல்லா கதையையும் சொல்லிவிட்டு போனால் போகிறார்கள் போ என்று சாவகாசமாக சொல்லுவர்.ஏன் இவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோபமாக வரும்
இந்த படத்தில் ஒரு உரையாடல் வரும்
"இந்த பிறவியில் பிறந்து விட்டோம்.இந்த அப்பா இந்த அம்மா இந்த அக்கா இந்த அண்ணன் தங்கை  இந்த உறவுகள் இனி அடுத்த பிறவியில் வருமா என்பது சந்தேகம்.எனவே இப்போது நம்முடன் வாழ்பவர்க்கு அன்பு சொல்லி வாழ்ந்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்."
அற்புதமான கருத்துநான் கல்லூரியில்  படிக்கும் போது என்தமிழாசிரியர் ஒரு சினிமா பைத்தியம் அவரிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டால் நல்ல இருந்தது.எந்த படத்திலும் நமக்குத் தேவையான எதாவது ஒரு செய்தி கிடைக்கும் என்பார்.அது நிஜம் தான்

Friday, July 30, 2010

மழை  மழை
நடுவில் நின்று போய் இருந்த மழை சாரல் ஊர்வலம் நேற்று மீண்டும் எட்டிப் பார்த்தது.கலையில் இருந்து வீரிட்டுக்கொண்டு இருந்த தென்னங்காற்று மதியம் ஒய்வு எடுத்துக் கொண்டது.சரி ஜன்னலைத் திறக்கலாம் என்று திறந்தால் வெள்ளி சரிகைத் தூரலாய் மழை சிலிர்த்துக் கொண்டு தூறிக்கொண்டு இருந்தது.அகல விரிய ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டேன்.ஒரு சிலிர்ப்பான குளிர் தோலை ஊடுருவிக்கொண்டு மயிர்க் கால்களைக் குத்திட்டு நிற்க வைத்தது.வெளியே போகும் போது பெயருக்குக் குடை எடுத்துக் கொண்டு சாரல் மழையில் நனைந்தேன்.பஸ் ஸ்டாப்பில் நனைந்த மரங்களும் காற்றில் நடுங்கி என்னை நனைத்தன.அப்பா....எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த மழை குளியல்,இரவில் வரும் அடுக்குத் தும்மலை மறந்து விட்டு நனைந்தேன்.........அருமை......அருமை......

Sunday, July 25, 2010

மிதிலா விலாஸ்

கண் வலியே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் .உன்னால் தான் எனக்கு ஒய்வு கிடைத்தது.புத்தகக் கடைக்குப் போகவும் நேரம் கிடைத்தது.என் நீண்ட நாள் கனவுப் புத்தகம் லக்ஷ்மியின் மிதிலா விலாஸ் வாங்கினேன்.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.இப்போது சீரியல் எடுக்கிறேன் பேர்வழி என்று பழிவாங்குதல் கொலை கொள்ளை ...என்று மனதை வருத்தும் காட்சிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து மனதை கேடுக்கின்றனவே.அந்த இயக்குனர்கள் ஏன்இந்த புத்தகங்களைப் படித்து நாடகமாக எடுக்கக் கூடாது?
கொஞ்சமாவது இந்தக் காலக் குழந்தைகள் வாழ்க்கைப் பாடத்தைப் படிப்பார்களே.....
எந்தவித ஆடம்பரமான வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் அற்புதமான ஆற்றோட்டமானஎழுத்து.
படிக்கும் ஆர்வம் குறைந்த இந்த காலத்தில் வார இதழ்களும் இந்தக் கதைகளை தொடராக வெளியிடலாம்.

Tuesday, July 20, 2010

திருவரங்கன் உலா
எங்கேயோ மெட்ராஸில் இருந்து வந்த மெட்ராஸ் ஐ  எனக்கு கட்டாய ஒய்வு என் ஹிந்தி வகுப்புகளில் இருந்து கொடுத்து விட்டது.கண்ணில் மணல் அள்ளிப் போட்டது போல ஒரு உறுத்தல்.முதல் நாள் வலி கண்ணைத் திறக்க விடவில்லை.டாக்டர் கொடுத்த மருந்து வலியை ஒட்டி விட்டது.என்னடா பண்ணலாம் என்று மனம் துறுதுறு என்று அலைந்த போது என் மகள் என் அக்கா வீட்டில் இருந்து அந்த பொக்கிஷத்தைக் கொண்டு வந்தாள்.
திருவரங்கன் உலா கண்களை இடுக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.என்ன ஆச்சரியம் வலி உறுத்தல் எல்லாம் மறந்து மரத்துப் போனது.
அப்பா ....அந்த ரங்கன் என்ன பாடு பட்டிருக்கிறான் ?
1974 தினமணிக் கதிரில் தொடராய் வந்தபோது மனதில் பதிந்த குலசேகரன் ,வாசந்திகா
அந்த அழகிய மணவாளன் மீண்டும் அவர்களுடன் வாழத் தொடங்கினேன்.
இப்போது பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கத்து கோட்டை மதில்களை காப்பாற்ற என்ன பாடுபாட்டு இருக்கிறார்கள்,
அப்பா சுல்தான்கள் ஆட்சிகாலத்தைப் பற்றிப் பேசும் போது ஆவேசப் படுவார்,அந்த ஆவேசம் இப்போது எனக்கும் வந்தது.சோம்நாத்பூர் இடிபாடுகளைப் பார்த்து விட்டு வந்து அப்பா சொல்லும் போது அப்படி என்ன பெரிய கஷ்டப் பட்டுவிட்டார்கள் என்று ஒரு சின்ன கேள்வி என் மனதில் எழுந்துள்ளது.?அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை
எனக்கு எப்போதுமே ஸ்ரீரங்கம் மிகவும் பிடித்தமான கோவில் .இப்போது இன்னும்....இன்னும்...பிடித்துப் போய் விட்டது இந்த முறை ஸ்ரீரங்கம் போகும் போது நின்று நிதானமாய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் ஆரியபட்டாள் வாசல் குலசேகரன் திரு மதில்....எல்லாமும் பார்க்கவேண்டும்...வீழ்ந்து வணங்கவேண்டும்

Wednesday, June 30, 2010

அம்மா எப்போதும் நினைவில்

இன்று மாங்காய் ஊறுகாய் போட்டேன்.உப்பு போடும் போது என்னுடன் அம்மாவும் கூடவே இருந்து கையில் அளந்து போடுவது போல ஒரு உணர்வு.என்ன ஆச்சரியம்....உப்பு சரியாக இருந்தது.காரம்...மனம்....சுவை.....ஊறுகாயை கிளறி பாட்டிலில் போடும் போது அம்மாவின் மனம் அப்படியே.....நானே சொல்லிக்கொள்ளக்கூடாது   நிஜமாகவே அம்மாவின் கை மனம் ....அம்மா சொல்லி சொல்லி ...எனக்கும் ..அம்மா அடிக்கடி சொல்வார்கள்...குளவி கொட்டி புழுவும் குளவி ஆகி விடும் என்று...நிஜம் தான் போல....அம்மா சொல்லும் போது ஆச்சரியப்பட்டேன்   அது எப்படி சாத்தியம் என்று...
இப்போது புரிகிறது.....அம்மாவும் என்னை கொட்டி கொட்டி குளவி ஆக்கி விட்டார்கள்....
தேங்க்ஸ் அம்மா....

Monday, June 7, 2010

தென்மேற்கு பருவக்காற்று

வரலாமா ...வேண்டாமா.....
சற்று யோசித்து....தயங்கி...
இதோ...வந்தே விட்டது...
தென் மேற்கு பருவக்காற்று...
சிலு சிலுவென்று ஈரக்காற்று
யானைக்கூட்டம் போவது போல மேக ஊர்வலம்
ஜன்னலில் பதித்த முகவாயை
எடுக்கவிடாது சில்லிட்டு சுகமளிக்கும்
இரும்புக் கம்பிகள்.
எல்லோரும் தூங்கியபின்னும்
சீறி அடிக்கும் காற்று
திட்டு வாங்கிக்கொண்டு ஜன்னலைத்
திறக்க  தூண்டுகிறது.
எங்கோ உடல் மறைத்துக் கூவி குயிலும்
வசந்தம் வந்துவிட்டது என்று
அறிவிப்பு தந்து விட்டது.
இன்னும் சாரல் மழை வருமா .....
என்று ஏங்கித் தவிக்கிறது
என் வீட்டு ரோஜாத் தொட்டி....
மழையே......வா.....வா.....
வந்து விடு.
உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
தொட்டிச் செடிகள்.

Sunday, May 30, 2010

ஆகாயவிமானம்  விபத்துக்குள்ளான செய்தி வயிற்றுக்குள் சிலீரென்று ஒரு அதிர்வு அலையை ஏற்படுத்தி விட்டது.மனம் கனத்துக் கிடந்தது.மேலும் கனமாக்கியது ஹிந்துவில் வந்த அந்த போட்டோ.ஏதும் அறியாப் பருவத்திலே உடல் தந்த உயிர் தந்த உறவுகள் காணாமல் போன அதிர்ச்சி அந்த சின்னக் கண்களுக்குள் என்ன ஆழமாய் தெரிகின்றன.?ஆண்டவன் என்ன நினைத்து அந்தக் குழந்தையின் வாழ்கையில் விளையாடி விட்டான் தெரியவில்லை.
அரை நூற்றாண்டு காலம் அம்மா அப்பாவுடன் வாழ்ந்து நமக்கு என்று கணவன் குழந்தை என்று தனி உலகம் வந்த பின்னும் கூட இதோ எட்டு மதங்களுக்கு முன் அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் போன பிறகு ஒரு வெறுமைப் பள்ளம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லையே.!
ஆண்டவா ! அந்த தளிரின் வாழ்வை வளமாக்கு.