Wednesday, February 24, 2010

நானும் அப்பாவும்
அப்பா எல்லோருக்கும் போல ஒரு அன்பான அப்பா .என் செல்ல அப்பா.எனக்குச் செல்லம் கொடுதததினால் அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்கிய அப்பா.நான் படிக்கமாட்டேன் என்று சொன்னதினால் என்னை ஹிந்தி படிக்கவேண்டாம் என்று சொன்ன அப்பா. (ஆனால் பின்னால் அதே ஹிந்தி என் வாழ்வின் ஆதாரம் ஆனது வேறு கதை.
அப்பாவின் ஹிந்தி வகுப்புகள் இன்று எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஹிந்தி நோட்ஸ் எழுதி கடைசியில் ஒரு தாமரைப்பூ இரண்டு இலைகள் வரைவார்.அதை நானும் செய்தேன்.
பாட்டு கிளாஸ்     நான் அப்பாவை மிகவும் சோதித்த வகுப்பு.எனக்கே நினைவே இல்லை.நான் எதனை முறை பாட்டு கற்க ஆரம்பித்தேன்  என்று.ஜண்டை வரிசை வரை சில சமயம் போகும் சில முறை ஸ்வரஜதி வரை....சில தடவை வர்ணம்   .....ஆனால் நான் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை.
சரி விட்டது ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று பாட்டுக்கு டாட்டா சொல்லி வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.பாவம்......அப்பா பாண்டமங்கலம் வரை சைக்கிளில் கூடிக் கொண்டு போவர்.ம்ம்ம்ம்ம்ம்        அதுவும் ..பாதியில் நின்றது.....
சோ இப்போ......எனக்கு எதுவும் முழுதும் தெரியாது.அதே சமயம் குறை கண்டுபிடிக்க மட்டும் தெரிந்து விட்டது. ....சரியான வாத்தியார் புத்தி........அப்புறம்......நான் முழுவதுமாக கற்றது பரத நாட்டியம் தான் .அது.....ஒரு பெரிய தொடரும் போட்டு எழுத் வேண்டிய கதை.....சோ ....(தொடரும்)

Monday, February 15, 2010

அழுத்தம்  வெல்வீர்......!
நண்பர்காள்......
யாரென்று பார்க்கிறீர்களா .......நான்...தான்....
என்ன தெரியவில்லையா.....?
நான் தான் உங்கள் நலம் விரும்பி... பேசுகிறேன்.
சற்று செவி மடலை என் பக்கம் சாய்ப்பீர்...........
உங்களுள் அழுத்தம்.....அழுத்தம்.....சரியா...?
என்ன எனக்கா   ?அழுத்தமா...?
பதற்றம் வேண்டாம்....நண்பரே...
நீங்கள் கவனம் சிதறி விட்டீர்கள்.என்ன ? சரியா ?
என்ன?.....கவனச் சிதறலா   ........?எனக்கா...?
ஏன் கேட்கமாட்டீர்கள்......?
உங்கள் குழப்பம் ...மன எரிச்சல்....வார்த்தை விபரீதம் ,
பார்த்தீர்களா.......பார்த்தீர்களா.......
தனிமனித உறவு கேட்டு விட்டதே....
மற்றவர்கள் ஒத்துழையாமை இயக்கம்
ஆரம்பித்து விட்டார்கள்....அடடா.....
சிக்கல்கள் சூழ்ந்தன.
இரத்த அழுத்த மானியில்
மெர்குரியின் அளவு
மேலும் கீழுமாக ......தவிக்கிறதே.....
அதோ மெல்ல நினைவு கரைகிறதே...
மருத்துவமனை..... டெட்டால் வாசனை....
படுக்கை...டாக்டர்கள் ....
மருந்து...மாத்திரை,,,மயக்கம்....
ஆழ்ந்த இழுத்து விட்ட மூச்சு....
நிம்மதியான   ஆழ்நிலை மயக்கம்....
அப்பாடா...தெளிந்து விட்டீர்கள்.
புரிந்ததா...சூழ்நிலைப் புரிதல் அவசியம்.
அதி அவசியம்.
கருத்துப் பரிமாற்றம் ....தேவை.
மிக மிகத் தேவை.
என்ன வேலை சுலபமாகிவிட்டது  இல்லையா....
பாராட்டுக்கள்...மேன்மையான பாராட்டுக்கள்.
மகிழ்ச்சியா நண்பரே......
அழுத்தம் வெல்வீர்.......
மன அழுத்தம் வெல்வீர்......
இது உபதேசமல்ல....
முன்னெச்சரிக்கை வாதம்
அதோ..இன்று அதே அழுத்தம் என்னையும்
தொடருகிறது.
இது ஒரு தொடர் நிகழ்காலம்,
புரிதல் இருந்தால்
அழுத்தக் கடலை அனுமன் போலத்
தாண்டி...விடலாம்.
என்ன நண்பரே....தயார......தானே...
களம் இறங்குங்கள்.
வெல்வீர்.......அழுத்தம்...வெல்வீர்.


இந்தக் கவிதையின் வேர் ஒரு காவல்துறை அதிகாரியின் உரை.ஆங்கில உரையை என்னிடம் கொடுத்து தமிழாக்கம் செய்துத் தரச் சொன்னார்கள்.என் கற்பனையும் சேர்ந்து கொண்டது.அந்த அதிகாரிக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு மழை.எனக்கும் சந்தோஷம்.உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, February 7, 2010

ஈஷாவில் என் அனுபவம்

நேற்று ரமாவுடன் ஈஷா சென்று இருந்தேன்.சுதா ரகுநாதன் கச்சேரி .இது வரை நேரில் கேட்டதில்லை.ரமாவுடன் சென்றது இரு புது அனுபவம்.
சுதா ஆரம்பிக்கும் போது சற்று சுருதி சேராதது போலத் தான் இருந்தது. ஸ்ரீ விக்னராஜம் பஜே.. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாட்டில் விநாயகப்பெருமானை அழகாக பல்லக்கில் ஏற்றி குதித்து கும்மாளமிட்டு கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.இந்த பாட்டை எத்தனையோ முறை கேசட்டிலும் ரேடியோவிலும் கேட்டு இருக்கிறேன்.நேரில் கேட்டது ஒரு புது அனுபவம் தான்.
அப்புறம் என் நினைவுப் பெட்டகத்தை உசுப்பி விட்டது "இடது பதம் தூக்கி"பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்.இதில் சிறப்பு   என்ன தெரியுமா ? நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டபிறகு முதல் முதலாக மேடையேறி ஆடிய பாடல்.நான் பத்தாவது படித்துக்கொண்டு இருந்தேன்.பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா .நான் தான் ஆஸ்தான நர்த்தகி. அப்போது கேசெட் கிடையாது.அம்மா தான் பாடுவார்கள்.ஒவ்வொரு தடவையும் ஆடிப் பழகும் போதும் பாடிப்பாடி அம்மாவுக்கு தொண்டை கட்டி விட்டது.அப்போது எங்கள் வீட்டில் பட்டுப் புடவை கிடையாது.யாரிடமோ இரவல் வாங்கிய ஒரு நீல வண்ணப் புடவை.முதல் முதலாக எனக்கு blouse  தைக்கப்பட்டது.அம்மாவே ஸ்கூலில் இருந்த தையல் மிசினில் தைத்தார்கள்.
எப்படியோ கச்சம் வைத்து கட்டிவிட்டார்கள்.காலில் அணிய சலங்கையும் இல்லை ,கொலுசும் இல்லை.ஏன்/? குஞ்சலம் கூட யாரோ தந்தது தான் .ஆனால் ஏன் முதல் மேடையேற்றம் இன்னும் பசுமையாக ஏன் நினைவில் எட்டிப் பார்கிறது.
எங்கிருந்தோ எங்கோ போய் விட்டேன் இல்லை.சரி சரி இப்போது நிகழ் காலத்திற்கு வருகிறேன்.
ஈஷாவில் பக்தர்கள் எல்லோரும் இசையின் நுணுக்கங்கள் புரிந்ததோ இல்லையோ மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல் தன்னை மறந்து ஈடுபட்டார்கள்.என்னால் தான் அந்த மயக்கத்தை ஜீரணிக்க முடியவில்லை.ஒரு வேளை ,நான் வளர்ந்த விதம் அப்படியோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் கச்சேரி முடிந்த பிறகு ஏன் மனதிலும் ஒரு அதிர்வலை வீசிக்கொண்டு இருந்தது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம்.நல்ல அனுபவம் தான்.