Sunday, August 22, 2010

ஒரு வருடம் கழிந்தது.....
சென்ற வருடம் ...கிட்டத்தட்ட இதே நாளில் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.தயங்கித் ..தயங்கி அம்மாவிடம் செய்தி சொன்னபோது பதறி ...நான் வருகிறேன்..என்று கிளம்பி வரத் துடித்தார்கள்."நீங்கள் வந்தால் உங்களுக்கும் கஷ்டம் ரமா இருக்கிறாள்"என்று ஆறுதல் சொல்லி விட்டேன்.பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை "எப்படி இருக்கிறாய் ? "என்று கைபேசியில் விசாரிப்பு.(நானும் அம்மாவும் பத்து பைசா scheme போட்டு இருந்தோம்)சரியாக ஒரு வாரம் கழித்து அம்மா காய்ச்சல் இருக்கிறது .என்று சொன்னார்கள்...மாயாவியைப் போல அந்த காய்ச்சல் என் அம்மாவை என்னிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது.இதோ....இன்னும் இரண்டு நாட்களில் அம்மாவின் வருஷாப்தீகம் ........கால தேவன் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறான்...நம்ப முடியாத உண்மை நடந்து முடிந்து ஒரு வருடமும் ஆகி விட்டது என்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை
இன்றும் காலை 10 30 மணி ஆனால் தொலைபேசி சினுங்காதா ? என்று ஒரு எதிர்பார்ப்பு.உண்மை சுடும் போது மனதில் ஒரு விதிர்ப்பு...ஓஓஒ ....அம்மா இனி பேச மாட்டார்கள்.அப்பாவின் வருஷாப்தீகம் நடந்த போது இந்த வலியும் வேதனையும் நான் அனுபவிக்க வில்லை.அம்மா இருந்தார்கள் ..அது என்னவோ எனக்கு யானை பலம் போல..ஆனால் இந்த முறை ஏதோ ஒரு வெறுமை இழப்பின் தாக்கம் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் குபுக் என்று கண்ணீர் துளி எட்டிப் பார்த்து விடுகிறது.

நேற்று இரவில் பார்த்த "ஆனந்த புரத்து வீடு "இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அம்மா அப்பாவை எதிர்பார்க்க வைக்கிறது.

Thursday, August 5, 2010

ஆடி பெருக்கு

விகடனில் கி வ ஜ எழுதிய ஆடி பதினெட்டு பற்றிய கட்டுரை காலபெட்டகத்தில் படித்தேன்.என் நினைவுகளும் பின்னோக்கி ஓட ஆரம்பித்து விட்டன.
இளமையில் ஆடி மாதம் அழகான மாதமாக வரவேற்கப் பட்ட மாதம்.வரிசையான பண்டிகைகள் கண்டிப்பாக ஆடி அமாவாசைக்குப்புதுத் துணி கிடைக்கும்.கூடவே வளையல் ரிப்பன்....பெரிய எதிர்பார்ப்புடன் கொண்டாட்டம்.
ஆடி முதல் தேதி தலை ஆடி ......பள்ளிக்கூடம் லீவ் ..தேங்காய் சுடும் பண்டிகை வாதநாராயண மரத்தின் குச்சியின் நுனியை சீவி தேங்காய் பொட்டுக்கடலை பொடி வெல்லம் பொடித்துப் போட்டு வெந்நீர் அடுப்பில் சுட்டுத் தின்னும் தேங்காய் கண்டிப்பாக தேவாம்ருதம் தான்.எப்படியாவது அப்பாவிடம் permission வாங்கி விடுவேன்.
அப்புறம் குச்சி ஆட்டம்......தெருதெருவாக குச்சியைத் தட்டி கொண்டு ஓடுவோம்.
அப்புறம் ஆடி 18 காவிரியின் கரை புரளும் வெள்ளம்.வேடிக்கை பார்க்கப் போவது கூட ஒரு இனிமையான அனுபவம் செம்மண் கலரில் நுங்கும் நுரையுமாக வரும் காவிரித் தண்ணீரைப் பற்றி இனி நினைவுகளில் தான் தேட வேண்டும்.
காலையில் இருந்தே வாசலில் மேள சத்தம் கேட்க ஆரம்பித்து விடும் மாரியம்மன் கோயில் வாசலில் இருந்து ஒரு ஊர்வலம் போகும்.(மகாபாரதம் படித்து விட்டு போவர்கள் என்று நினைவு.)தலையில் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கொட்டு  கொட்டிக்கொண்டு புதுத் துணி சரசரக்க ஊர்வலம் போகும்.புதுப் பெண் மாப்பிளை .....இந்த வேடிக்கை பார்க்கவே முழு நாளும் கழிந்து விடும்
மாலையில் அப்பாவுடன் விளக்கு விடுவதை வேடிக்கைப் பார்க்கப் போவோம்.ஆடி 18 விழாக் கடைகளில் கண்டிப்பாக பேரிக்காய் வாங்குவோம்.
நிறைய.....நிறைய.......நினைவுக்கூட்டம்.....ஓடி வருகின்றன.என் கைகளுக்குத் தான் வேகம் பத்தாது.ஆற்றின் ஈரத்துடன் சிலு சிலுவென்று சாரலும் நனைக்கும்.அந்த பெரிய ஆலமரத்தின் இலைகள் அசையும் போதுமறைந்து கண்ணாமூச்சி காட்டும்சூரியன் வர்ண ஜாலங்களை காவிரியின் நீர்பரப்பின் ஜரிகையாய் நெளிய விடுவான்.இந்த அழகு இனி மேல் நினைவுப் பெட்டகத்தில் மட்டும் தான்,

Tuesday, August 3, 2010

என்னை பாதித்த படம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமை.இன்று கண்டிப்பாக நான்கு மணிக்கு சன் T V  படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அடமாக உட்கார்ந்து விட்டேன் .என்ன ஸ்பெஷல் தெரியுமா ?மாயாண்டி குடும்பத்தார் படம் போட்டு இருந்தார்கள் .அந்த படத்தின் விஷேசம் என்ன தெரியுமா ? அம்மா கடைசியாய் பார்த்து விட்டு ரொம்பவும் பாராட்டி நீ கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று மூச்சு இரைப்புக்கு நடுவில் சொன்ன படம்.நானும் பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்தேன்.திருட்டு cd  கொடுக்கும் பூக்கரனிடம் கூட சொல்லி வைத்து இருந்தேன்.அம்மா ஏன் ரொம்பவும் பிடித்தது என்று சொன்னார்கள் என்று படத்தைப் பார்க்கும் போது தான் புரிந்தது.ரொம்பவும் சாதரனம குடும்பக் கதை.ஆனால்....அதில் அந்த கடைசி மகனின் ....கஷ்டங்களில் அம்மா அப்பாவைப் பார்த்திருக்க வேண்டும் அதனால் தான்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிக்கு வந்திருந்த போதெல்லாம் அப்பா தான் பட்ட கஷ்டங்களை கதை போல் சொல்வார்விடியற்காலை குக்கர் சத்தத்தின் நடுவே அப்பாவின் வரலாறு .....அப்போது அவை ஏதோ அப்பா எனக்கு வாழ்க்கைப் பாடம்சொல்லிக் கொடுக்கிறார் என்று தான் நினைத்தேன்.அப்புறம் அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அம்மா என்னுடன் இருந்த போது அம்மாவின் நினைவு ஊர்வலக்கோவைகளும் அப்பாவின் கஷ்டங்களை வரிசை படுத்தி இருந்தன.அவை எனது ஆழ  மனக் கிணற்றில் இவ்வளவு நாட்கள் தொங்கிக் கொண்டு இருந்திருக்கின்றன.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்து அழுதேன்.மனம் ரொம்ப பாரமாக இருந்தது.அப்பா எல்லா கதையையும் சொல்லிவிட்டு போனால் போகிறார்கள் போ என்று சாவகாசமாக சொல்லுவர்.ஏன் இவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோபமாக வரும்
இந்த படத்தில் ஒரு உரையாடல் வரும்
"இந்த பிறவியில் பிறந்து விட்டோம்.இந்த அப்பா இந்த அம்மா இந்த அக்கா இந்த அண்ணன் தங்கை  இந்த உறவுகள் இனி அடுத்த பிறவியில் வருமா என்பது சந்தேகம்.எனவே இப்போது நம்முடன் வாழ்பவர்க்கு அன்பு சொல்லி வாழ்ந்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்."
அற்புதமான கருத்துநான் கல்லூரியில்  படிக்கும் போது என்தமிழாசிரியர் ஒரு சினிமா பைத்தியம் அவரிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டால் நல்ல இருந்தது.எந்த படத்திலும் நமக்குத் தேவையான எதாவது ஒரு செய்தி கிடைக்கும் என்பார்.அது நிஜம் தான்