ஒரு வருடம் கழிந்தது.....
சென்ற வருடம் ...கிட்டத்தட்ட இதே நாளில் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.தயங்கித் ..தயங்கி அம்மாவிடம் செய்தி சொன்னபோது பதறி ...நான் வருகிறேன்..என்று கிளம்பி வரத் துடித்தார்கள்."நீங்கள் வந்தால் உங்களுக்கும் கஷ்டம் ரமா இருக்கிறாள்"என்று ஆறுதல் சொல்லி விட்டேன்.பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை "எப்படி இருக்கிறாய் ? "என்று கைபேசியில் விசாரிப்பு.(நானும் அம்மாவும் பத்து பைசா scheme போட்டு இருந்தோம்)சரியாக ஒரு வாரம் கழித்து அம்மா காய்ச்சல் இருக்கிறது .என்று சொன்னார்கள்...மாயாவியைப் போல அந்த காய்ச்சல் என் அம்மாவை என்னிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது.இதோ....இன்னும் இரண்டு நாட்களில் அம்மாவின் வருஷாப்தீகம் ........கால தேவன் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறான்...நம்ப முடியாத உண்மை நடந்து முடிந்து ஒரு வருடமும் ஆகி விட்டது என்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை
இன்றும் காலை 10 30 மணி ஆனால் தொலைபேசி சினுங்காதா ? என்று ஒரு எதிர்பார்ப்பு.உண்மை சுடும் போது மனதில் ஒரு விதிர்ப்பு...ஓஓஒ ....அம்மா இனி பேச மாட்டார்கள்.அப்பாவின் வருஷாப்தீகம் நடந்த போது இந்த வலியும் வேதனையும் நான் அனுபவிக்க வில்லை.அம்மா இருந்தார்கள் ..அது என்னவோ எனக்கு யானை பலம் போல..ஆனால் இந்த முறை ஏதோ ஒரு வெறுமை இழப்பின் தாக்கம் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் குபுக் என்று கண்ணீர் துளி எட்டிப் பார்த்து விடுகிறது.
நேற்று இரவில் பார்த்த "ஆனந்த புரத்து வீடு "இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அம்மா அப்பாவை எதிர்பார்க்க வைக்கிறது.
No comments:
Post a Comment