Sunday, November 7, 2010

இனிய பயணம்
எதிர் பாராமல் ஒரு பயணம் வாய்த்தது.கர்நாடகாவின் பழமையும் புதுமையும் கலந்த ஒரு புனிதப் பயணம்.எங்கள் ஊரின் ஒரு பயண ஒருங்கைமைப்பாளர் என்னிடமும் என் கணவரிடமும் மாற்றி மாற்றிப் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்.நான் தான் "சரி" என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து என் prestige காப்பற்றப் படுவதற்காக என்னவரும் தலையாட்ட இனிய பயணம் உறுதி படுத்தப் பட்டது.ஆனால் ஒரு தயக்கம் ....ஒரு சந்தேகம்...ஒரு வாரம் வேலை,என் வகுப்புகள் , விட்டு விட்டு  எப்படி? .......சரி ...கால் வைத்தாகி விட்டது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் ..என்று ஏற்பாடுகளில் முனைந்தோம்.'.கோவில் கோவிலாக போகப் போகிறோமா ?'மகளின் ஆரம்பகால மறுப்புகளை ஒரு வழியாக பேசி சரி செய்து விட்டேன்.
ஒரு செவ்வாய்கிழமை ..இரவு பத்து மணிக்கு ..அந்த tempo traveller பன்னிரெண்டு பயணிகளுடன் பயணம் துவங்கியது.ஒருவரை ஒருவர் அறியாத உடன் பயணிகள் ....பாவம் அந்தக் கூட்டத்தில் என் மகள் மட்டும் தான் இளையவள்..பின் சீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டாள்..அதிலேயே அவள் கோபம் வெளிப்பட்டது...அவள் என்ன சொன்னாலும் தலையாட்டிவிட்டு நான் டிரைவர் இருக்கைக்குப் பின்னே அமர்ந்து கொண்டேன்.
ஆரம்பமே சிறு தடங்கலுடன் தான் இருந்தது.அந்த வண்டியின் permit sheet காணவில்லை என்று காந்திபுரத்தில் நிறுத்தி தேடல் துவங்கியது.டிரைவர் என்னவோ எல்லா இடங்களிலும் தேடி விட்டு இல்லை என்று சொல்லி விட்டார்.வண்டி நின்ற இடம் காந்திபுரம் பிள்ளையார் கோவில் ....என்னப்பா பிள்ளையாரப்பா ....இது என்னடா சோதனை என்று நினைத்துக் கொண்டு தூக்கமும் விழிப்புமாக ..காத்துக் கொண்டு....நல்ல வேளை ..வண்டி உரிமையாளர் வந்தார்...அவரிடம் டூர் நடத்தும் மாமா "என்னப்பா  இது புது பிரச்சனை " கோபமே இல்லாமல் கேட்டார் வண்டி உரிமையாளர் ஏதோ ஜி  பூம்பா மாதிரி எதற்குள்ளேயோ கை விட்டு தேடினார் கிடைத்து விட்டது அந்த பேப்பர் ..சரி போலாம் ரைட் ....வண்டி புறப்பட்டு விட்டது.....மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி விரைந்தது அந்த சின்ன வண்டி....சிலு சிலுவென்று கோவையின் குளிர் காற்று முகத்தில் மோத ஆரம்பித்தது.இரவின் மெல்லிய தாலாட்டு ...(ஹரிவம்ஸ் ராய் பச்சனின் ஒரு கவிதையில் படித்திருக்கிறேன் ..யாரும் இல்லா இரவில் வானப் பெண் தாலாட்டுப் பாடுவாளாம் )அந்த அமைதியான இரவில் கண்களை இழுத்து மூட வைத்தன.வசதியாக கால்களை வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல தூக்க தேவதையின் அணைப்புக்குள் புக ஆரம்பித்தேன்.
"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..."பெரும் ஓசையுடன் அந்த  vedio பிளேயர் அலற ஆரம்பித்தது. சரியான எரிச்சல்...கண்களுக்கு எதிரே பயங்கரமான கிராபிக்ஸ் கலவையுடன் ஆடல் பாடல் ...அவ்வளவு  தான் ஆனந்தமான தூக்கம் தொலைந்து போய் விட்டது.சரி ....வேடிக்கை பார்க்கலாம் என்று ஜன்னல் திறந்து இரவின் அழகை பார்க்க ஆரம்பித்தேன்....விர் ...விர்...என்று விரையும் பேருந்துகளும் லாரிகளும் அமைதியான இரவுப் பெண்ணை துன்புறுத்திக் கொண்டு இருந்தன.இப்போது அந்த வீடியோ காட்சி கண்களுக்குப் பழகி விட்டது...நாள் பூராவும் வேலைசெய்த களைப்பு கண்களை அழுத்தியது.என்னை அறியாமல் நித்திரைப் பெண்ணின் பிடிக்குள் மாட்டிக்கொண்டேன்.திடீரென்று வண்டி நின்றது...ஓடிக் கொண்டிருந்த போது தாலாட்டிய மெல்லிய காற்றின் வேகம் குறைந்த போது தானாகவே விழிப்பு வந்தது.பலவந்தமாக இமை பிரித்துப் பார்த்தபோது நீண்ட வரிசையின் கடைசியில் எங்கள் வண்டி நின்று கொண்டு இருந்தது.பண்ணாரியம்மன் கோயில் வாசலில் வண்டி நின்று கொண்டு இருந்தது.எல்லோரும் இறங்கினோம்.காட்டு வழிப் பாதையில் பயணிப்போருக்கு வழித் துணையாய் உடன் வரும் எல்லை தெய்வம் .செருப்பு போட வேண்டாம் ...மாமாவின் தெளிவான அறிவுறுத்தலை காதில் வாங்காமல் செருப்புக் காலுடன் கோவில் எல்லையில் பிரவேசித்தோம்.எங்கு பார்த்தாலும் அசுத்தம்.குப்பை ...தண்ணீர் தேங்கிக் கிடந்தது...சிறிது தயக்கத்துடனே நடந்தோம்....காலை தரிசனத்திற்காக இரவே வந்து கோவில் நடையில் படுத்திருப்போர்....அப்போது சுருதி பிசகாமல் பழைய கன்னடம் தமிழ் கலந்த ஏதோ ஒரு பாட்டு ஒலித்தது .அங்கு இருந்த கும்பலில் தூக்கம் வராத அருகில் உள்ள காட்டுவாசிப் பெண்கள் ஏதோ ஒரு அமானுஷ்யமான குரலில் பாடிக் கொண்டு இருந்தார்கள்.சற்றே மனம் சிலிர்த்தது....அந்த நடுஇரவில் ....உரத்த குரலில்..  எனக்கும் உனக்கும் புரிந்தால் போதும் என்பது போல் அம்மன் சந்நிதியின் முன் பாடிக் கொண்டு இருந்தார்கள்.கூட்டம் இல்லாமல் அம்மனை பூட்டிய கம்பி வேலியின் இடையே தரிசித்தோம்..அம்மனும் எங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தாற்போல் இருந்தது.பிறகு எதிரில் இருந்த குண்டம் ,பலி கொடுக்கும் இடம் எல்லாம் பார்த்து வண்டிக்குத் திரும்பும் போது எங்கள் வண்டியின் பின்னே வரிசை நீண்டு இருந்தது.அது வரை மௌனம் காத்த டிரைவர் வண்டி கிளம்ப இன்னும்இரண்டு மணி நேரம் ஆகும் மேலே மலைப் பாதையில்ஏதோ விபத்து என்று பொதுஅறிவிப்பு செய்தார்.நடு இரவில் ...வண்டி விட்டு இறங்கி டீக் கடையை தேடினோம்.ஒருகடையில் டீ என்ற பெயரில் சற்றே ஆறியவெந்நீர் கிடைத்தது.சரி கிடைத்த வரை போதும் என்று அதையும் விடாமல் குடித்து விட்டு வண்டி திரும்பினோம்.அப்போது  சும்மா இல்லாமல் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.டூர் ப்ரோக்ராம் பேப்பர் பார்த்து எனக்கு தமிழில் எழுதிக் கொடுங்கள் என்றார்.ஒரு சிறு நட்புடன் எங்கள் பேச்சு தொடர்ந்தது.என் மகளைப் பார்த்து இந்த cd  உங்களுக்குப் போர் அடிக்கும் வேறு போடுகிறேன்.என்றார்.அப்போது மேலே மலைப்பாதையில் இருந்து ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு வந்தது.ஒருவர் உயிர் இழந்து விட்டார் என்றும் இன்னொருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள்.கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம்சரியாகி விட்டது.எங்கள் வண்டியின் பயணமும் தொடர்ந்தது.தூக்கம் தொலைந்து போனது .மலைப் பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் விரைந்து ஒட்டிய டிரைவர் விபத்துக்கு உள்ளான வண்டியைக் காட்டினார்.மலைப் பாதை பயணத்தில் இருளில் நின்றிந்த யானைகள் கண்ணில் பட்டன.கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தூக்கம்...விடியும் போது வண்டி நின்ற இடம் நஞ்சன்கூட் ...கபினி ஆற்றின் கரையில்....(தொடரும்)

1 comment:

  1. .கோவில் கோவிலாக போகப் போகிறோமா ?'மகளின் ஆரம்பகால மறுப்புகளை" veetukku veedu vasapadi

    ReplyDelete