Sunday, April 11, 2010

வாசலிலே வேப்பமரம்
பூக்கும்...உதிரும்...
ஆனால்
உதிர்ந்த அம்மா நினைவுப் பூக்களைத்
தெளித்து விட்டு
மீண்டும் மீண்டும்
பூத்துக்கொண்டு இருக்கிறாள்.
வேப்பமரம் மட்டுமா ...
அம்மா வருவாளா .....
என்று காத்துக்கிடக்கிறது....?
நானும் தான்.....
அம்மாவின் வாசம் மட்டும்
அவ்வப்போது  மெல்ல மெல்ல
வருடிச் செல்லும் தென்றல் காற்றாய்
நினைவின் வெம்மையைத்
தணித்துக் கொண்டு இருக்கிறது.
நானும் கேட்கிறேன்
அம்மா வருவாயா  ?

2 comments:

  1. மிக அழகாக எழுதியிருக்கிறாய். " Our sweetest songs are those that tell us of the saddest thoughts" என்று ஷெல்லி என்ற கவிஞன் எழுதியது எவ்வளவு உண்மை! வேப்பம்பூக்களில் மட்டுமா? அம்மா என்ற வார்த்தையை எங்கு கேட்டாலும் ஒரு ஏக்கம் வந்து கவிகிறதே! இந்த உணர்வு காலப்போக்கில் குறையுமா? நானும் நீயும் உன்னுடைய நடன வகுப்புகளுக்காக கண்டர் பள்ளிக்குப்போகையில் வேப்பம்பூ சீசன் வந்து விடடால் அங்கிருந்து பொறுக்கிக்கொண்டு வருவோமே, உனக்கு நினைவிருக்கிறதா?

    அம்மா போன வருடம் முதல் முதலாக
    எங்கள் வீட்டு மாவடுவில் ஊறுகாய் போட்டது கடைசி முறையாகவும் போய்விட்டதே! இன்னும் சுபாவின் வீட்டில் அந்த மாவடு மீதியிருக்கிறது. உப்பில் நனைந்த அந்த வடுக்களைப்பார்த்தால் என் கன்னங்களையும் உப்பு நீர் தான் மறைக்கிறது.
    அம்மாவுக்கு அதிருஷ்டம் தான்! யாருக்கும் சலிப்பு ஏற்படாமல் இன்னும் நினைத்து ஏங்க வைக்கும் பாக்கியம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. Amma truly deserves this love. இப்படிப்பட்ட அம்மாக்களாக நாம் இருப்போமா?

    ReplyDelete
  2. நீ சொல்வதும் நிஜம் தான் .இழப்புகளும் சோகங்களும் நினைவுப் பெட்டகத்தை உடைத்துத் திறந்து விடுகின்றன.அம்மாவின் ஊறுகாய் மணம் இன்னும் நாசியை நிறைத்துக் கொண்டு இருக்கின்றது.இந்த முறையும் நார்த்தங்காய் கொண்டுவந்தார்.ஆனால்....நறுக்கிப் போட அம்மா இல்லை.எனக்கும் மனம்வரவில்லை.ஊறுகாய் போடாமலேயே அந்த நார்த்தங்காய் குப்பை கூடைக்குப் போய் விட்டது.

    ReplyDelete