Saturday, December 19, 2009

அக்ரகாரத்தில் மார்கழி
இன்னுமொரு மார்கழி மலர்ந்து விட்டது.ஆனால் அந்த குளிர் இல்லை.அக்ரகாரத்தின் மார்கழி விடியல்கள் மறக்க முடியாத நினைவுக்கூட்டங்கள்.கோலம் இது மார்கழியின் ஸ்பெஷல்.அடுத்தது ஸ்ரீதர் சொன்ன அப்பாவின் மார்கழி பஜனை.அப்போது அப்பா சுருதிப்பெட்டியும் சால்வையும் துணை வரப்புறப்படும் போது அரை குறை தூக்கத்தில் புள்ளி வைத்துக்கொண்டு போராடிக்கொண்டு இருப்பேன்.எனக்கு எப்போதுமே கோலத்தில் சிறு ஆர்வம் உண்டு.ஆனாலும் புள்ளி வைத்த அம்மா என்ன கோலம் நினைத்தார்கள் என்று ஊகித்து போட்டு விடுவேன்.முடித்தவுடன் அம்மா பார்த்து விட்டு எங்கேயாவது கோணல் தெரிந்தால் உட்கார்ந்து கொண்டு புள்ளி வைத்தாயா? என்று கண்டு பிடித்து விடுவார்கள்.எபோதுமே முப்பது நாட்களும் புது கோலம் போட்டு தெருவையே அசத்தி விடுவேன்.
அப்போது மஞ்சரியில் வரும் கோலங்கள் பிரசித்தம்.அது மட்டும் இல்லை ரமாவின் shorthand நோட் (மாமா கொடுத்த பெரிய நோட்) என்னுடைய பயிற்சிக்களம் .அந்த நோட் முழுவதும் என் .கை வண்ணங்களைப் பார்க்கலாம்.அதோடு என் ஹிந்தி எக்ஸாம் நோட்ஸ் கூட இருக்கும்.அம்மாவுக்கு அந்த நோட் பொக்கிஷம்.மார்கழி பிறந்தவுடன் அந்த நோட்டுக்கு ராஜ மரியாதை தான்.கூரை வீட்டுக்கு முன் வாசல் சாணி போட்டுத் தெளித்து சும்மா அப்படியே மொசைக் போட்டது போல இருக்கும்.எதிர்வீட்டுக் கல்யாணி லக்ஷ்மி அக்கா மற்றும் பலர் அம்மாவிடம் "மாமி என்ன கோலம் போடப்போகிறீர்கள் ?"என்று கேட்டு விட்டுத் தான் போடுவார்கள்.அதே போல் யார் வீட்டு வாசலில் புதிய கோலம் இருந்தாலும் புள்ளி எண்ணிக்கொண்டு வந்து அடுத்த நாள் போட்டு விடுவேன்.இப்போது கூட அப்படித்தான் இங்கே கோலத்துக்கு என் நாத்தனார் போட்டி.நான்பூக்களும் வன்னதுப்பூசிகளும் தாமரையும் மலரும் கோலங்கள் போட்டால் "என்ன அதிசயம்?வரைந்து விட்டு புள்ளி வைத்தாயா?"என்று தான் கேட்பார்.ஒரு சிறு வருத்தம் எனக்கு உண்டு.அந்த சின்ன கிராமத்துத் தெருக்களில் என் கோலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இங்கே எனக்கு கிடைத்தது இல்லை.இருந்தாலும் விடுவதில்லை என்று இந்த வருடமும் ஆரம்பித்து விட்டேன்

No comments:

Post a Comment