மார்கழி மாதத்துக் கோலங்களும் பூசணிப்பூக்களும்
மார்கழி மாதத்து நினைவு வரிசையில் நான் முந்தி என்று ஓடி வருவது பூசணிப்பூ போட்டி தான்.பூசணிப் பூ அனேகமாக அந்த ஆக்ராகரத்தின் தொட்டியத்தா வீட்டுக் கூரையில் கிடைக்கும் அல்லது எங்கேயாவது தப்புச் செடியில் கிடைக்கும்.யார் வீட்டில் அதிகம் பூ வைப்பது என்ற போட்டியில் முதல் நாளே மொட்டுக்களாகவே பறித்து வந்து அண்டாவில் போட்டு வைப்பேன்.வாய்க்கால் ஓரம் கூட கிடைக்கும்.இப்போது சாணி பிள்ளையாரும் இல்லை பூசணி மலர்களும் இல்லை.அந்த பூசணி மலர்களை எடுத்து வரட்டி தட்ட வேண்டும் ஆனால் கிழக்குத் தெரு ஆடுகளுக்கு என் வீட்டு பூக்கள் என்றால் ஒரு தனி பிரியம் தான்.மாலையில் ஸ்கூல் விட்டு வரும் போது பூக்களும் சாணி உருண்டையும் ஏன், என் கோலமும் சிதைந்து இருக்கும் ,ஞாயிற்றுகிழமைகளில் பூ வாடும் வரை காத்திருந்து அதை தட்டி வைப்பேன்.அந்த சாணி வரட்டிகளின் சூட்டில் தான் பொங்கலன்று பால் பொங்கும்.ம்ம்ம்ம் ..........இன்று காஸ் அடுப்பில் பால் பொங்குகிறது,
இந்த தலைமுறைக்கு இந்த சம்பிரதாயங்கள் புரியவும் இல்லை.புரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்.ஏன்?நகர வாழ்கையில் இது எதுவுமே இல்லாத போது அதை ஜீரணிக்க நான் மிகவும் சிரமப் பட்டேன்.இன்றோ நானும் இந்த சோம்பேறி வாழ்க்கைக்குப் பழகி விட்டேன்.என்னுடைய நினைவுகளில் மட்டும் பால் பொங்கிக்கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment