Sunday, January 17, 2010

மதுரை சித்தப்பா
அம்மாவின் தங்கையின் கணவர் என்ற உறவு தான் என்றாலும் அப்பா இளவல் என்று சொல்லி பேசியதாலும் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் .மதுரையின் திருவிழா அறிமுகமானது அவரால் தான்.மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் பாரதியார் பயன் படுத்திய நாற்காலி,அவர் திருத்திய கட்டுரை நோட்டுக்களை காண்பித்த சித்தப்பா என் மனதில் ஹீரோ ஆனார்.தமிழை " இருந்தமிழே .....அருந்தமிழே..செந்தமிழே..விதம் விதமாக அடைமொழியின் வாயிலாக அறிமுகப்படுத்தி தமிழ் மேல் ஒரு தணியாத தாகத்தை ஏற்படுத்தியவர்.
நா பா வின் நண்பர் என்ற செய்தி இன்னும் அவரை என் மனதில் உயரத் தூக்கி வைத்தது.அவர் எம்.ஏ. தேர்வுக்கு தயார் செய்த சிலப்பதிகார உரை என்னை மதுரைக் காண்டத்தைப் படிக்கத் தூண்டியது.
சித்தப்பா என்னை தினமணி பிரஸ் இல் என் 11th தேர்வு முடிவுகளை அச்சாகும் போதே பார்த்து மலைக்க வைத்தார்.அதன் பலனாக அப்பாவிடம் எனக்கு transister பரிசு கிடைத்தது.
அவனியாபுரம் வீட்டில் இருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு நடத்தியே கூடி வந்து என்னை மதுரையின் காதலி ஆகினார்..கோவிலின் உள்ளே தமிழ் சங்கம் நடக்கும் இடத்தைக் காட்டினார்.அப்போது என் கனவுகள் பாண்டியனின் சங்கம் கண்ணுக்குத் தெரிந்தது.
சித்தப்பாவிடம் நான் மலைத்த இன்னொரு விஷயம் அவர் ஒரு அரசியல் வாதி.  தி.மு.க.பேச்சாளர்.நாத்திகம் பேசுவார்.தோளில் துண்டுடன் அவர் பேசும் தமிழ் என்னைக் கட்டி போடும்.
அப்படி நான் பார்த்து வியந்த சித்தப்பா இப்போது வயோதிகம் ,நோய்.ஆகிய காரணங்களால் தளர்ந்து நேற்று என் கைகளை அழுந்த பிடித்த போது மனம் கலங்கி விட்டேன்.காலம் எவ்வளவு கொடூரமானது.மனிதர்களை எப்படி மாற்றிப் போடுகிறது?இது புரியாமல் நாம் இன்னும் குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.

No comments:

Post a Comment