என்னை பாதித்த கவிதை
पुकार
அழைப்பு
திருப்தி என்பதை அறியாத
தாகம்,கவலை,குழப்பம்
நிறைவற்ற மனதுடன்
எப்போதுமே ஒரு
விலக்கப்பட்ட பார்வையுடன்
கம்மிய குரலுடன்
என் மனதில் எழும்
வேதனைக் குரல்.....
ஓங்கி ஒலிக்கிறது
என்னை யாரும் நேசிக்க வில்லை............
கடலுடன் அலைகளின்
த்வந்த யுத்தம்...
கரம் நீட்டி வான் காதலனைத்
தழுவத் துடிக்கும்
அலைக் காதலி,
நீண்டு பரந்துவிரிந்த
தெறித்து விளையாடும்
ஒவ்வொருத் துளித் தண்ணீரும்
வேதனைக் குரல் எழுப்புகிறது......
என்னை யாரும் நேசிக்க வில்லை............
பூமி அன்னையின் கருணைக் கண்கள்
ஏன் என்னைப் பார்க்க வில்லை ?
நிலமகளின் ஒரு கீற்றுப் புன்னகை
என் வாழ்வின் செயல்பாடுகளை
மென்மையாக ,பிரகாசமாக,
வெளிச்சப்புள்ளிகளாய் மாற்றிவிடும்....
ஆனால்....
அவளும் தான் ஓலமிடுகிறாள்
யாரும் என்னை நேசிக்க வில்லை.........
காலைபனியின் புதியராகம்.
இசைபடும் இனியவேளை.
ஆனால்.....கூடவே
ஒலிக்கும் அத்ருப்தியின்
அபஸ்வரம்........
எங்கும் வஞ்சனை,வேதனை....
துன்பம்,பேராசை....
இருளரக்கன் மெல்ல பூமிப்பெண்ணை
விழுங்கத் தொடங்குகிறான்.
அப்போதும் மெல்லிய விசும்பலுடன்
ஓர் ஓலம்......கேட்கிறது.
யாரும் என்னை நேசிக்க வில்லை........
இருள் அழகியின் நெற்றியில்
பொட்டிடும் நிலா மகள்.
அவளிடம் இருந்து விழாதா?
சுவாதி நட்சத்திரத் துளி.....
என் இதயம் என்னும் முத்துசிப்பியில்
முளைத்திடுமே
வெண் முத்துக் குட்டி.....
ஆனால் அதோ கேட்கிறதே ஓலம்
யாரும் என்னை நேசிக்கவில்லை.......
அங்கே பார் மொட்டுக்களின்
சுமைதாங்கி ..இளம் தளிர்க் கரங்கள்
மெல்லிய கிளை பரப்பி
மலர்க் கூட்டம் சுமக்கும் மரக் கூட்டம்.
இனிய சுவாசத்தால் மணம்
நிறைக்கும் மலர்மொட்டுக்கள்.
ஆனால்.....
அங்கேயும் விஷ முட்கள் ......
பட்டு மலர் இதழ்கள்
காயப் படுத்தப் படுகின்றன.
என் காதில் ஒலிக்கிறதே...
அதே ஓலம்...அதே குரல்..
என்னை யாரும் நேசிக்கவில்லை..........
இறைவன் சிரிக்கிறான்....
அடே...முட்டாளே.....
நேசம் ,பாசம். இரண்டும்
கடைச் சரக்கல்ல...
எங்கும் கிடைக்காது.....
அதை நாம் தான் தரவேண்டும்....
கண்ணீர் துளிகள் அடகு வைக்கப்பட்டால்தான்
உலகம் கடனாகத் தரும்.
வட்டியுடன் நீ தான் அதை திருப்பித்
தர வேண்டும்....
இதை நீ உணர்ந்தால்....
எங்கும் எப்போதும் உன் ஓலம் ஒலிக்காது.
யாரும் என்னை நேசிக்க வில்லை.......
அருமை, அருமை. இன்னும் எழுது. அழகிய கவிதைகளையும் கதைகளையும் மொழிபெயர்த்துக்கொடு. பிரிண்ட் அவுட் எடுத்து உன் மாணவர்களுக்குக்கூட கொடுக்கலாம்.
ReplyDeleteரமா