Friday, January 1, 2010

எது விடுதலை
வழக்கம் போல ஒரு மார்கழி மாதத்து பகல்.வேலை முடிந்தது.புதிதாக வந்த வார இதழின் புது மணம் நாசியின் உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி விட்டன.வெது வெதுப்பான இளம் வெயில் வா... வா... என்று அழைத்தது.செண்பக மரத்தின் தண்டில் ஏதோ அசைவு தெரிந்ததும் அங்கே கவனம் சென்றது.என்ன இது புதியதாக இருக்கிறதே! சின்ன ஆச்சரியத்துடன் பார்வை படர்ந்தது.ரகசியமான சந்தோஷம்.ஒரு சின்ன லோலாக்குப் போலே செண்பக மரத் தண்டில் ஏதோ ஊஞ்சலாடிக்கொண்டு இருந்தது.பக்கத்தில் போய் கண்கள் சுருக்கிப் பார்த்தேன்.அடடா   ஒரு கூட்டுப்புழுவின் பரிணாம வளர்ச்சி.உள்ளுக்குள் ஏதோ அசைவது தெரிந்தது.புது புத்தகத்தின் ஈர்ப்பு கொஞ்சம் குறைய....உள்ளே போய் சேர் கொண்டு வந்தேன்.பார்வை அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.அந்த ஊசலாடும்
வடிவம் அறிமுகமான வடிவம்.நெற்றியைச் சுருக்கி யோசித்தேன்.ஓ.....அம்மாவின் கல்யாண  போட்டோவில் காதுக்கு அருகில் ரகசியம் பேசிய லோலாக்கு டிசைன் தான்.பெரிய கண்டுபிடிப்பு .என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.அந்த கூடு இன்னும் வேகமாக அசைந்தது.நுனியில் இப்போது ஒரு விரிசல்.பார்வை விலக்காமல்கவனித்தேன்.ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி முட்டி மோதி வெளியே வந்தது.அடடா...என்னிடம் கேமரா இல்லையே!
        நல்லகருப்பு சிறகுகள்.வெளிர் மஞ்சளும் பச்சையும் கலந்த புள்ளிகள்.வெளியே வந்த அந்த சின்ன உயிருக்கும் இந்த புற உலகம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.கொழுக் மொழுக் என்று உள்ளே போன நாமா இப்படி ? என்று நினைத்தது போலும்.ஒரு நிமிடம் சும்மாவே இருந்தது,பிறகு மெல்ல சிறகை ஆட்டிப் பார்த்தது.அப்படியே மெல்ல மேலே எழும்பியது.பூச்சிக்கும்கொஞ்சம் பயம் போலே ,சிறகை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டது,இப்போது கீழே வந்தது.மீண்டும் ஒரு முயற்சி.இப்போது இன்னும் கொஞ்சம் மேலே .....அப்பாடி .....ஒரு வழியாக பறக்க ஆரம்பித்து விட்டது.பக்கத்தில் வாடாமல்லி மொட்டுக்கள் பச்சையும் வாடாமல்லி கலருமாக பட்டுப்பூச்சியை அழைத்தன.பூவின் மீது பட்டும் படாமல் அமர்ந்தது.வாய்ப்பகுதியில் இருந்து ஒரு சுருள் நீண்டது.தேன்சுவை உணர்ந்த அந்த பூச்சி மலருக்கு மலர் தாவி பிறவியை ரசித்தது.சுற்றிலும் மலர்ச் செடிகள் .பூச்சி பறந்தது.என் கவனமும் சிதறியது.அப்போது ஒரு தேன் சிட்டு தான் கூட்டை விட்டு எட்டிப் பார்த்து ட்விக் ட்விக் என்று கொஞ்சியது.ஒரு நிமிஷம் தான் பூவின் தேனை ரசித்துப் பறந்த அந்த பட்டுப்பூச்சி தேன் சிட்டின் வயிற்றுக்குள்..ஐயோ....மனம் பதறியது.என்ன உலகமடா இது.கூட்டுப்புழு பட்டுப் பூச்சி ஆனது விடுதலையா...இல்லை என் பிறந்தோம் என்று உணரும் முன்னே உலகை விட்டுப் போனது விடுதலையா....யோசித்தேன்....விடை கிடைக்கவில்லை.

1 comment:

  1. என்னமாக எழுதியிருக்கிறாய் கீதா! ஒரு சில நிமிடங்களுக்குள் ஜனனத்தையும் மரணத்தையும் ஒருங்கே சந்தித்து விட்டாய்.ஜனனத்தைப்பார்த்த சிலிர்ப்பு மறைவதற்குள் மரணத்தையும் தரிசித்து விட்டாய். அந்தப்பட்டாம் பூச்சி ஒரு வேளை முன் பிறவியில் கங்கைக்குப் பிறந்திருக்குமோ! உன் நடையும் மிக அருமை. பிரேமா அக்காவும் இதைப்படித்தார்கள். நீ ஏன் இன்னும் தீவிரமாக எழுதக்கூடாது ? ஸ்ரீதர் கவிதை எழுதுகிறான். நீயோ உரைநடையையே கவிதையாக எழுதுகிறாய். அம்மா இல்லையே என்ற வருத்தம் இன்னும் அதிகமாக ஆகிறது. ஒரு முடிவில் தான் மற்றொன்று ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி. அம்மாவின் மரணம் இந்த வலைப்பூவின் ஜனனத்துக்கு ஒரு ஆரம்பமாகஆயிற்று. ஒரு பட்டாம்பூச்சியின் மரணத்தில் கவிதைத்தனமான உன் பதிவுகளின் ஜனனம். வருத்தமாக இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்க!
    அன்புடன், ரமா

    ReplyDelete